
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வள்ளுவர் நகர் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமான பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. அதில் பேருரையாற்ற கலந்து கொண்ட பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எவ.வேலு கலந்துகொண்டு பணிக்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்.

மேலும் அதேபோல ஆதியூர் ஊராட்சியில் இந்தியன் வங்கி கட்டிடம், மகளிர் சுய உதவி குழு கட்டிடம்,பத்திரப்பதிவு அலுவலகம், உள்ளிட்ட கட்டிடங்கள் அமைக்கவும் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதன் பின்பு மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “எல்லோருக்கும் எல்லா சலுகைகளும் கிடைக்க வேண்டும் என நினைப்பது திமுக மட்டும் தான்; இதுதான் திராவிட மாடல் ஆட்சி. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் ஓட்டுப் போட்டால் எல்லாத்தையும் உரிமையாக கேட்டிருக்கலாம்; ஆனால் ஓட்டுப் போடாமலே அனைத்து சலுகைகளும் வீடு தேடி வருகிறது என திமுகவுக்கு வாக்களிக்காத தமிழக மக்கள் பீல் பண்றாங்க. அந்த அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு சகோதரிகளுக்கு தாய் மாமன் சீர் தருவது போன்று முதலமைச்சர் ஸ்டாலின் மாதம்தோறும் தமிழ்நாட்டு சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்” என்றார்.
இந்த நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், திமுக மாவட்ட கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.