சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி பொறியியல் கலந்தாய்வு குறித்துப் பேசுகையில், “தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி துவங்குகிறது. இதில் ஜூலை 22 ஆம் தேதி முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 28 ஆம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 9 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 2 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 3 ஆம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு கட்ட கலந்தாய்விற்கும் மாணவர்களுக்கு 12 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வு 4 கட்டங்களாக முதலில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த இந்த ஆண்டு 3 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு மாணவர்கள் வேறு ஏதேனும் கல்லூரிக்குச் செல்ல விரும்பினால் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு ஜூலை 21இல் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.