ஓசூரில் சொந்தப் பணத்தைப் போட்டு புதிதாகக் கட்டிக் கொடுத்த வீட்டுக்கான செலவுத்தொகையை தராமல் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஏமாற்றியதால் ஏற்பட்ட விரக்தியில் கட்டடப் பொறியாளர் கர்ப்பிணி மனைவியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒடுவன்குறிச்சியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (31). கட்டடப் பொறியாளர். இவருடைய மனைவி ஷகிலா (27). இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சதீஸ்குமார் குடும்பத்துடன் ஓசூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். அவருக்கு நண்பர்கள் மூலமாக ஓய்வு பெற்ற காவல்துறை எஸ்.ஐ சக்கன் என்பவர் அறிமுகம் ஆனார்.
முன்னாள் எஸ்.ஐ சக்கன், தனக்கு புதிதாக வீடு கட்டித் தரும்படி சதீஸ்குமாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்பேரில் சதீஸ்குமார் தனது சொந்தப் பணத்தின் மூலம் 2 அடுக்கு மாடி வீடு கட்டிக் கொடுத்துள்ளார். வீடு கட்டுமானத்திற்காக மொத்தம் 40 லட்சம் ரூபாய் செலவானதாகவும், அதைக் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார். இதையடுத்து சக்கன் அவரிடம் முதல்கட்டமாக 30 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். அதன்பின் நீண்ட காலமாகியும் நிலுவைத் தொகை 10 லட்சத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இது குறித்து சதீஸ்குமார் அவரிடம் கேட்டபோது, கட்டுமான செலவுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டேன். இதற்கு மேல் ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாது. நான் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். யாரிடம் வேண்டுமானாலும் சென்று புகார் கொடு. யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என அலட்சியமாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஸ்குமார், இது குறித்து ஓசூர் காவல்நிலையத்தில் சக்கன் மீது புகாரளித்தார். இது ஒருபுறம் இருக்க, தன்னிடம் வேலை செய்து வந்த கட்டுமானத் தொழிலாளர்கள், சக ஊழியர்களுக்கு சம்பளம், கூலி கொடுக்காமல் திணறிய சதீஸ்குமார், குடும்பத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்.
பணம் கிடைக்காத ஏமாற்றம் மற்றும் காவல்துறையில் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வந்ததால் ஏற்பட்ட விரக்தியால் அவர் மே 16ம் தேதி தனது வீட்டில் பூச்சி மருந்து குடித்து விட்டார். அதையடுத்து 3 மாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியுடன் சேர்ந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு உடனடியாக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.