தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் திருச்சி கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கட்டுக் கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
10 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீர்வள ஆதாரத்துறை இளநிலை பொறியாளர் ஆறுமுகத்தை, அமலாக்கத்துறையினர் தங்களது காரில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மணல் குவாரியில் பணியாற்றிய, நீர்வள ஆதாரத்துறை உதவிப் பொறியாளர் சாதிக் பாட்ஷா, உதவியாளர் சத்யராஜ் ஆகியோரையும் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில் 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து கணக்கில் வராத மணல் விற்பனை குறித்து விசாரணை நடத்தி, பின்னர் சில ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு, நேற்று இரவு 11 மணிக்கு 3 பேரையும் அதிகாரிகள் விடுவித்தனர்.