புகைப்பழக்கத்திற்கு எதிராக பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நெடுநாட்களாகப் பேசி வருகிறார். இந்நிலையில், புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான சட்டம் இந்தியாவிற்குத் தேவை என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நியூசிலாந்தில் 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலகில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியூசிலாந்து தான்.
புகைப்பிடிப்போர் எண்ணிக்கை குறைவதால், நியூசிலாந்து மக்களின் மருத்துவத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி (5 பில்லியன் டாலர்) குறையும். ஒரு சட்டத்தால் இதைவிடப் பெரிய நன்மையை ஒரு நாட்டுக்குச் செய்துவிட முடியாது. அதனால்தான் இது வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம்.
புகைப்பழக்கத்தைப் படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தை விட இந்தியாவுக்குத்தான் அதிகம் தேவை. எனவே, இந்தியாவில் புகைப்பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.