என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை. ‘ஜெ’ காலத்தின்போது ஐ.ஜி. விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பனை ஒடுக்கப் பணியில் அமர்த்தப்பட்டவர். அவரது குழுவில் இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை. வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர் வெள்ளத்துரை.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் வழக்கில் கைதான ரவுடி, மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்ததில் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் வெள்ளத்துரை. இவரது மனைவிதான் ராணி ரஞ்சிதம். எம்.ஏ., எம்.ஃபில். படித்த திருச்சி பெரியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஒய்வு பெற்றவர்.
சகஜமாகப் பேசும் சுபாவம் கொண்ட ராணிரஞ்சிதம் அணுகுமுறையிலும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது. தி.மு.க.வின் மா.செ. ஆவுடையப்பன், அ.தி.மு.க.வின் இசக்கிசுப்பையா ஆகிய இரு அரசியல் ஜாம்பவான்கள் மோதுகிற அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராகக் களம் காண்கிறார் ராணி ரஞ்சிதம். தொகுதியின் பெண் வேட்பாளர் என்பதால் அ.ம.மு.க.வின் ஈர்ப்புத் தன்மை கூடும் என்பது கணக்காம்.
அவரது கணவரான என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை, நெல்லை மாநகரின் குற்ற ஆவணக்காப்பகக் கூடுதல் போலீஸ் துணை கமிஷ்னராக பணிபுரிந்து வருகிறார். தேர்தல் பணிக்கு சம்பந்தமில்லாதவர் என்ற போதிலும் மாநகர போலீஸ் அதிகாரியின் அறிக்கையின்படி வெள்ளத்துரையின் மனைவி தேர்தலில் வேட்பாளர் என்பதால் தேர்தல் அல்லாத பணியான சென்னை தலைமையிட போலீஸ் அலுவலகத்திற்கு போலீஸ் தலைமையின் உத்தரவுப்படி மாற்றப்பட்டிருக்கிறார் என அத்தொகுதியில் பரபவலாக பேசப்பட்டுவருகிறது.