திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நகராட்சியில் பணிபுரியும் முன்கள பணியாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் முன்னிலை வகித்தார். முகாமிற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கி விட்டு பேசும்போது, ''தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் நலத்துறை இருந்ததாகவே தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றவுடன் தொழிலாளர் நலத்துறை மூலம் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, ஓராண்டிற்குள் இதுவரை சுமார் 80 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. படித்தவர்கள் வேலை தேடி அலைந்த காலம் மாறி, படித்தவர்களைத் தேடி வேலை வரும் பொற்காலமாக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார்'' என்றார்.
இந்த நிகழ்வில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவராவ், துணை ஆட்சியர் தினேஷ்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர் பொன்ராஜ், நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.