சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள், கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் என 350-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 100 மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. விடுமுறை எடுத்தால் கூலி இல்லை. இதில் பல பேருக்கு 40, 50 வயதைத் தாண்டிவிட்டது. வேறு வேலைக்குச் செல்லமுடியாத நிலையில் பணி நிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வறுமையான நிலையில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அதிமுக அரசு இருந்தபோது முதல்வர் உள்ளிட்ட துறை சார்ந்த அமைச்சர், அதிகாரிகளிடம் மனு கொடுத்து போராட்டத்தையும் நடத்தினர். இதுகுறித்து அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, அவர்களிடத்திலும் அதே கோரிக்கையை வைத்துள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் இதுபோன்று பணியாற்றியவர்களைத் தமிழக அரசு பணிநிரந்தரம் செய்துள்ளது. அதேபோல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஊழியர் சங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். இது குறித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த கூலித் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். செய்யவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவி உள்ளிட்ட ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.