தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அண்மையில், கரோனா இரண்டாம் அலை உருவாகி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேபோல், கரோனா தொற்றின் இரண்டாவது அலையை நோக்கி இந்தியா பயணிப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மேலும் இரண்டு பள்ளிகளில் 7 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளியில் மூன்று மாணவர்களுக்கும், திருவையாறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 187 பேருக்கும், 18 கல்லூரி மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 205ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கோவை மாவட்டத்தில் அவினாசி அசாலையில் உள்ள சென்ட்ரல் வங்கி கிளையில் ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவ்வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 5.08 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் 23.46 இலட்சம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை 23.43 இலட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.