பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை : ‘’ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக திகழும் மூன்று துறைகள் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவை தான். ஆனால், வளர்ச்சிக்கு அவசியமான இந்த மூன்று துறைகளுக்குமான நிதி ஒதுக்கீட்டை கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக அரசு குறைத்து வந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு வங்கி அரசியல் செய்வதற்காக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிமுக அரசு தொடர்ந்து குறைத்து வருவது பிற்போக்கானது; கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் பி.ஆர்.எஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற ஆய்வு அமைப்பு, இந்திய மாநிலங்களின் நிதிச் செயல்பாடுகள் பற்றி விரிவான ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 26 மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசத்தின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகத்தின் நிதி மற்றும் சமூகச் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
குறிப்பாக கல்வித்துறையில் தமிழக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது. 2011-2019 காலங்களில் அனைத்து மாநிலங்களும், மத்திய அரசு திட்ட நிதியையும் சேர்த்து, சராசரியாக தங்களின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 17.30% தொகையை கல்விக்காக செலவிட்டுள்ளன. தில்லி அரசு மிகச்சிறப்பாக 26.9% நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், தமிழக அரசோ 2011-15 வரையிலான காலத்தில் 16.5% மட்டுமே செலவிட்டது. அதுவும் 2016-19 வரையிலான காலத்தில் 15.40 விழுக்காடாக இது குறைந்து விட்டது. அதேபோல், சுகாதாரத்துறைக்கு அனைத்து மாநிலங்களும் சராசரியாக 4.4% ஒதுக்கீடு செய்யும் நிலையில் தமிழகத்தின் ஒதுக்கீடு 4% மட்டுமே. அதேநேரத்தில் தில்லி மாநில அரசு அனைவரையும் விஞ்சும் வகையில் 12.60% நிதி ஒதுக்கி மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தியுள்ளது.
அதேபோல், வேளாண்துறைக்கு அனைத்து மாநில அரசுகளும் சராசரியாக 6.20% ஒதுக்கும் நிலையில், தமிழகம் அதைவிட குறைவாக 6.1% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. பாசனவசதிகளை மேம்படுத்த 5.3% நிதியை அனைத்து மாநிலங்களும் ஒதுக்கீடு செய்யும் நிலையில், தமிழக அரசு 2011-15 காலத்தில் 2.0% நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. அதுவும் கூட 2016-19 காலத்தில் 1.60 விழுக்காடாக குறைந்து விட்டது. அண்டை மாநிங்களான தெலுங்கானா ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 14 விழுக்காட்டையும், ஆந்திரா 13.70 விழுக்காட்டையும் பாசனத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் நிலையில் தமிழகம் ஒதுக்கீடு செய்யும் தொகை மிகவும் குறைவாகும். அதனால் தான் தமிழகத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் உட்பட கடந்த 65 ஆண்டுகளாக எந்த பாசனத் திட்டமும் செயல்படுத்தப் படவில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அடுத்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வீதம் ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்தலாம் என்று நடப்பாண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது.
கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம் ஆகிய 4 முக்கியத் துறைகளுக்குமே தமிழக அரசு ஒதுக்கும் நிதி தேசிய சராசரியை விட மிகவும் குறைவு ஆகும். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு துணை நிற்கும் இன்னொரு விஷயம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகும். விவசாயம், நீர்ப்பாசனம், மின்சாரம், சாலைகள், வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் சராசரியாக 32% நிதியை செலவிடுகின்றன. தெலுங்கானா மிக அதிகமாக அதன் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 63 விழுக்காட்டை செலவிடுகிறது. பின்தங்கிய மாநிலங்கள் என்றழைக்கப்படும் சத்தீஸ்கர் 42%, மத்தியப் பிரதேசம் 38%, ஒதிஷா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் தலா 37%, பிகார், ராஜஸ்தான் தலா 36% நிதியை ஒதுக்குகின்றன. ஆனால், முன்னேறிய மாநிலம் என்று பெருமிதப்படும் தமிழகம் ஒதுக்கிய தொகை 24% மட்டும் தான். இது தேசிய சராசரியான 32 விழுக்காட்டில் நான்கில் மூன்று பங்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2012-ஆம் ஆண்டில் தொலைநோக்குத் திட்டம்& 2023-ஐ அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா அடுத்த 11 ஆண்டுகளில் தமிழகம் ஆண்டுக்கு தலா 11% வளர்ச்சியடையும்; 2023-ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ரூ.7.50 லட்சமாக அதிகரிக்கும்; ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் வருவாய் ரூ.30 லட்சமாக இருக்கும் என அறிவித்தார். இந்த இலக்குகளை எட்ட 11 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்யப் பட வேண்டும். அப்படியானால் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 60% கட்டமைப்பு வசதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அதில் பாதியைக் கூட தமிழகம் ஒதுக்கீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு அதன் வருவாய்க் கணக்கு செலவுகளான ரூ.1,93,742 கோடியில் இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக மட்டும் ரூ.75,723 கோடியை, அதாவது 46.25 விழுக்காட்டை செலவழிக்கிறது. இதை முற்றிலுமாக ஒழிக்கக் கூடாது என்பதால், பயனற்ற இலவசங்கள்- மானியங்களை ஒழித்தும், வருவாயை அதிகரித்தும் அதன் மூலம் கிடைக்கும் நிதியை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்போது அனைத்துத் துறைகளிலும் பின்னேறிக் கொண்டிருக்கும் தமிழகம் அடுத்த சில ஆண்டுகளில் அதலபாதாளத்தில் விழுவதை தவிர்க்க முடியாது.’’