கடந்த 16 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் கடைசி கட்ட பரப்புரையில் வேட்பாளர்கள் தீவிரமாக இருந்த நிலையில் அதைவிட பரபரப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி வட்டார மொழியில் பேசிய ஒரு ஆடியோ வெளிவந்தது.
அந்த ஆடியோ உரையாடல் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை தூண்டிவிட்டுள்ளது.
இந்த ஆடியோவால் தஞ்சை தொகுதி பொட்டலங்குடிக்காடு மக்கள் தேர்தலை புறக்கணித்தனர், பிறகு சமாதானம் செய்யப்பட்ட பிறகு வாக்களித்தனர். அன்று இரவு புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் காவல் நிலையம் முற்றுகையில் தொடங்கி, 19ந் தேதி தடியடி கல்வீச்சு என்று நகர, சுற்றியுள்ள 49 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டதால், அந்த பகுதியில் போராட்டம் குறைந்தாலும் மற்ற பகுதிகளில் போராட்டம் வெடித்தது. பெண்கள் துடைப்பத்துடன் போராடச் சென்றனர்.
இந்த நிலையில் வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்ட நபரை பிடிக்க கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியை புதுக்கோட்டை போலிசார் நாடியுள்ளனர். இந்த நிலையில்தான் சமூகவலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட நபரின் படத்துடன் வெளியான பதிவில் படத்தில் உள்ளவர்தான் பெண்களை இழிவாக பேசிய ஆடியோ வெளியிட்ட நபர் என்றும், அவர் கைது செய்யப்படும் வரை பகிருங்கள் என்றும் அந்த பதிவு இருந்தது. இந்த பதிவும் வேகமாக பரவியதால் அந்த படத்தில் இருந்த தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் அய்யாச்சாமி..
என் படத்துடன் தவறான பதிவை பரப்பி வருகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் வதந்தி பரப்புவதாக கொத்தமங்கலம் செல்வராஜ் மகன் குகன் மற்றும் மற்றொரு நபர் மாரிமுத்து என்றும் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கொத்தமங்கலம் குகனை திருச்சிற்றம்பலம் போலிசார் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை ஏடிஎஸ்பி இளங்கோவன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி ஆகியோர் விசாரணை செய்தனர். 2 நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பினார் என்று கைது செய்துள்ளனர்.
மேலும் இதே போல பலரும் தவறான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதாவது... போராட்டத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே ஆடியோ வெளியிட்டதாகவும், அந்த வதந்திகள் பரவுவதால் அந்த தகவலை பரப்பும் நபர்களையும் பிடித்து விசாரணை செய்தால்தான் வீண் வதந்திகள் பரவாமல் தடுக்க முடியும் என்று சொல்லும் போலிசார் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதே தவறான பதிவுகளை போலிசாரும் பகிர்வதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.