திருவள்ளூரை அடுத்த ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சிலிக்கான் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி சிகிச்சை அளித்து வந்துள்ளனர் அங்கு அவருக்கு சிகிச்சையில் திருப்தி இல்லாததால் அங்கிருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் என்றால் ரூபாய் 45 லட்சம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து பத்து ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் தொழிற்சாலைக்குச் சென்று மருத்துவ உதவிக்காக பணம் கேட்டபோது அவர்கள் பணம் தர மறுத்து விட்டனர். தற்போது மிகப்பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் உடன் செயற்கை சுவாசத்தால் மட்டுமே அவர் உயிர் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து பிரவீன் குமார் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
ஆக்சிஜன் சிலிண்டர் உடன் வந்து அவரைப் பார்த்து அதிகாரிகள் நீங்கள் ஏன் வந்தீர்கள்? வேறு நபர்களை அனுப்பியிருக்கலாமே எனக் கூறினர் பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் தனியார் தொழிற்சாலையில் நாங்கள் பேசி முடிவு எடுக்கிறோம் எனவும் உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.