பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், 'மகளிர் உரிமைத் தொகையை அரசு அறிவித்திருக்கிறது. அனைத்து மகளிருக்கும் கொடுப்போம் என்பது தேர்தல் வாக்குறுதி. ஆனால் தற்போது தகுதி உடையவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை என்கிறார்கள்’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துப் பேசுகையில், “தகுதியானவர்கள் என்பது ஒன்றும் தவறான வார்த்தை இல்லை. அமைச்சராக இருக்கிறோம், நாங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறோம். மாதம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறோம். எங்களுக்கும் ரேஷன் அட்டை இருக்கிறது. அதனால் எங்களுக்கும் ஆயிரம் ரூபாய் தேவை என்று அர்த்தமா? அப்படியல்ல எனவே தகுதியானவர்கள் என்பதை செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் இந்த இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் யார் யாருக்கு தகுதி இருக்கிறதோ, யாருக்கெல்லாம் வழங்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் வழங்குவதற்கு தமிழக முதல்வர் கட்டாயம் செய்வாரேயொழிய அதற்காக வசதி படைத்தவர்களுக்கெல்லாம் ரேஷன் அட்டை இருப்பதற்காக அனைவருக்கும் அறிவிக்க முடியாது” என்றார்.