சானமாவு வனப்பகுதியையொட்டிய விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்குகளை தின்று ருசி கண்ட மூன்று யானைகளால் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 200க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி, தமிழக வனப்பகுதியான ஜவளகிரி வழியாக அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் ஊடுருவின. இவை பல்வேறு குழுக்களாக பிரிந்து முகாமிட்டு இருந்தன.
விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்ததால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அனைத்து யானைகளும் தேன்கனிக்கோட்டை வழியாக மீண்டும் கர்நாடகா மாநிலம் பன்னேர்கட்டா வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. இவற்றில் 3 யானைகள் மட்டும் தமிழக வனப்பகுதியை விட்டுச் செல்லாமல் அடம் பிடித்து இங்கேயே முகாமிட்டுள்ளன. அவை இரவு நேரங்களில் சுற்றுவட்டார கிராமங்களில் விளைநிலங்களை நாசப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், மார்ச் 20ம் தேதி காலை, ஒற்றை யானை ஒன்று சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது. இதைப்பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, ஒற்றை யானையை மீண்டும் சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
சானமாவு வனப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரை அருகில் கோபசந்திரம், சானமாவு, ராமாபுரம், காமன்தொட்டி உள்ளிட்ட கிராமங்களில் பூசணி, வெண்டை, கேரட், பீட்ரூட் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவற்றை நன்கு ருசி கண்ட யானைகள் இப்பகுதியை விட்டு வெளியேற மறுப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
தனித்தனியாக சுற்றித்திரியும் மூன்று யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு துரத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம், யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.