கோவையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாங்கரை, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதும் மனிதர்களை தாக்குவதும் நடந்து வருகிறது.
நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சின்னதடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் வந்த ஒன்றை காட்டு யானை, அதே பகுதியைச் சேர்ந்த நந்தீஸ்வரன் என்பவரை தாக்க முற்படும்போது, அந்நபர் அதனிடம் தப்பிக்க ஓடியுள்ளார். அப்போதும் அந்த யானை அவரை துரத்தி துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது.
இதில் அவரது முதுகு பகுதியில் தோல்பட்டை கிழிந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் காட்டு யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்குவந்த வனத்துறையினர், ஒன்றை காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த நந்தீஸ்வரனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதுகில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டபோதும் எந்த வித அச்சமும் இன்றி சாதரணமாக சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏறி அமர்ந்து பேசியவாரே சிகிச்சை எடுத்தக்கொண்ட நந்தீஸ்வரனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.