சிறு, குறு தொழில் மற்றும் தொழிற்சாலைகளின் மின்சாரக் கட்டணம் புதிதாக கணக்கு எடுத்த பிறகே மின் கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார் காங்கிரஸ் கமிட்டியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி. ராஜன். அவர் மின்சார வாரிய சேர்மேனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
"இன்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கரோனா என்ற வைரஸின் தாக்கத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்காமல் ஏறத்தாழ 40 நாட்களுக்கு மேலாக அந்த தொழிற்சாலையின் முதலாளிகள் கூட வெளியே செல்ல முடியாமல், தடை உத்தரவில் இருந்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக அனைத்து சிறு, குறு மற்றும் தொழிற்சாலைகள், விசைத்தறி உரிமையாளர்கள் ஆகியோருடைய கைப்பேசிக்கு குறுந்தகவல் (SMS) ஒன்று தங்களது துறையின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அது என்னவென்றால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு என்ன ரீடிங் வந்ததோ அந்த தொகையை வருகிற 6-ம் தேதிக்குள் செலுத்துங்கள் என்று அந்த குறுஞ்செய்தியில் இருந்ததை பார்த்தேன். மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தனது பேட்டியில் சொல்லும்பொழுது, கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் மின்சாரக்கட்டணம் 144 தடை உத்தரவு முடிந்தபிறகு எடுக்கக்கூடிய ரீடிங் அடிப்படையில் மின்சாரத் துறைக்கு பணம் செலுத்தினால் போதும் என்று அவர் கூறியிருந்தார். கடந்த 40 நாட்களாக இயங்காமல் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கு, அதற்கு முன்பு எடுத்த இரண்டு மாதங்கள் வைத்து தொகையை செலுத்துங்கள் என்று சொன்னால் இது எந்த விதத்தில் நியாயம்? ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேல் இயங்காமல் பூட்டி வைத்திருந்த தொழிற்சாலைகள் உடைய மின்சாரக்கட்டணம் குறைவாகதான் இருக்கும். அப்படி இருக்கையில் தாங்கள் தொகையை செலுத்துங்கள் என்று சொல்வது அடிப்படை நியாயமற்றது.
தொழில்கள் அனைத்தும் நசுங்கிவிட்டது, இதில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் ஆறு மாத காலம் பிடிக்கும். கடன் வாங்கி தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய தொழில் அதிபர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள். எனவே தாங்கள் தங்களது அதிகாரிகளுக்கு 144 தடை உத்தரவை முடிந்தபிறகு ரீடிங் எடுத்து அதன்படி தொகையை செலுத்த சொல்ல வேண்டும். அப்படி நீங்கள் செய்தால்தான் அந்த தொழில்கள் மீண்டும் நடைபெற்று, நம் நாடும் தொழில் நசிவிலிருந்து மீண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே உடனடியாக தங்கள் துறையின் மூலம் அனுப்பி இருக்கக்கூடிய குறுஞ்செய்தி உத்தரவை திரும்ப பெறவேண்டும். தடையுத்தரவு முடிந்த பிறகு கொஞ்ச காலம் அவகாசம் கொடுத்தால் புதிய மின் கட்டணத்தை செலுத்துவதற்கு உதவியாக இருக்கும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்." என கூறியிருக்கிறார்.