கடந்த 2 வாரமாக அதிமுகவில் நிலவி வருகிற யார் முதல்வர் என்ற விவாதம் உச்சகட்டம் நோக்கி போய் உள்ளது. அதற்கு காரணம் ஒரு சில அமைச்சர்கள் முதல்வர் ஈ.பி.எஸ் தானென்றும் இல்லை... இல்லை... முதல்வர் ஓ.பி.எஸ் தான் என்றும் அவர்களாகவே கூறிவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் நேற்று துணை முதல்வர் வீட்டிலும், முதல்வர் வீட்டிலும் மாறி மாறி 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் இறுதியாக பேசப்பட்ட விஷயம்தான், தலைமையின் அனுமதி இல்லாமல் முதல்வர் வேட்பாளர் பற்றி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பேசக்கூடாது என்ற அறிக்கை.
ஆனால் தற்பொழுது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் முடிவாக இருக்கிறாராம். தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பழைய வடாற்காடு மாவட்டம் உட்பட நீலகிரி வரை உள்ள மேற்கு மண்டலம் முழுக்க தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதேபோல் தென் மாவட்டத்திலும் ஏறக்குறைய 30 தொகுதிகள், அதில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் தனக்கு சார்பானவர்கள் என்று முதல்வர் நம்புகிறார். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-இன் தரப்போ... தொடர்ந்து என்னை டம்மி ஆக்க வேண்டிய சூழல் ஏன் வந்தது என்று அவர்களுக்குள் விவாதித்த பொழுது, சிறையில் உள்ள சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன் தனது விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக கொண்டுவந்தார். சசிகலாவால் உருவாக்கப்பட்டவர் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவரல்ல ஈ.பி.எஸ்.
ஆனால் ஜெயலலிதாவால் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டவர் பன்னீர்செல்வம். இந்த நிலையில் பன்னீர் செல்வமா? அல்லது எடப்பாடி பழனிச்சாமியா? என்ற போட்டி வரும் பொழுது அதிமுகவில் மறைந்த இரண்டு தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றொருவர் ஜெயலலிதா. இவர்கள் இருவரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் ஓ.பி.எஸ் ஆகவே, ஓபிஎஸ் தான் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட வேட்பாளர் என பிரச்சாரம் இருக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு கூறியிருக்கிறது.
இந்த நிலையில் தென்மாவட்டத்தில் சில இடங்களில் எடப்பாடி செல்வாக்கை நிறுத்தினாலும் ஓபிஎஸ்ஸும் கொங்கு மண்டலத்திலும் வலுவான பலத்தை ஏற்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக கொங்கு மண்டலத்தில் உள்ள சில எம்.எல்.ஏக்கள் நம்மிடம் பேசும் பொழுது, இங்கு சமூக ரீதியாக பாசம் காட்டப்பட்டது உண்மைதான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனது உறவினர்களுக்கு மட்டுமே அதிகமாக எல்லாவற்றையும் செய்து வருகிறார். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கொடுக்கக்கூடிய எந்த கோரிக்கைகளையும் அவர்கள் கொடுக்கக்கூடிய எந்தத் திட்டங்களையும் அவர் இருக்கிறது... இருக்கிறது... என்று கூறுகிறார். ஆனால் செய்யவில்லை. இதற்கு பல உதாரணங்கள் உள்ளது.
ஆனால் ஓ.பி.எஸ்ஸோ அவர் சார்பாக, அவரோடு இணக்கமாக உள்ளவர்களுக்கு என்ன தேவையோ எல்லாவற்றையும் செய்து வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படி செய்வதில்லை. அதற்கு காரணம் அரசியல் நிலைப்பாட்டில் தான் பொதுவானவர் என்று எடப்பாடிபழனிசாமி காட்டிக் கொள்கிறார். ஆனால் இப்போது அதிமுகவில் அப்படியெல்லாம் எதுவுமில்லை. அடுத்து ஆட்சியில் யார் வருவது என்பது தான் முக்கியம். அடுத்தது கண்டிப்பாக அதிமுக ஆட்சி இல்லை. இது எல்லா எம்.எல்.ஏக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தெரியும். கொங்கு மண்டலத்தில் வளரும் ஈ.பி.எஸ்ஸிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. எனவேதான் அதிமுக என்றால் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பி.எஸ்ஸை நாங்கள் தூக்கி புடிப்போம். கட்சிக்குள் பிரச்சினை வரும்பொழுது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமியை நம்பி யாரும் இல்லை என்பதை நிரூபிப்போம் எனக் கூறினார்கள்.