ஊருக்குள் புகுந்த காட்டுயானை ஜன்னலை உடைத்து விடுதியின் சமையலறையிலிருந்த உணவைத் தும்பிக்கையால் சாப்பிடும் வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியில் தமிழ்நாடு - கர்நாடக எல்லையை ஒட்டியுள்ளது பந்திப்பூர் புலிகள் காப்பகம். இந்த வனப்பகுதியில் உள்ள சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது வழக்கம். அண்மையில் சிறுத்தைப் புலி ஒன்று ஹோட்டலுக்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்த காட்டு யானை, சரியாக விடுதியின் சமையலறைக்குச் சென்று ஜன்னலை தனது தும்பிக்கையால் பெயர்த்து எடுத்து உள்ளே இருந்த உணவை சாப்பிட்டுள்ளது. பாத்திரங்களைத் தள்ளிவிடும் சத்தம் கேட்டு ஓடிவந்த ஊழியர்கள், காட்டுயானையின் செயலைக் கண்டு அதிர்ந்து அந்தக் காட்சிகளை மொபைல் ஃபோனில் பிடித்து அதனை சமூகவலைதளத்தில் வெளியிட, தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.