Skip to main content

ரூ.2000 லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அதிகாரி

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Electricity Board official arrested for bribe Rs.2000 lakh

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கராசு(45). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து அதில் விவசாயம் செய்து வருகின்றனர். இவரது அண்ணன் கணேசனுக்கு பிரிக்கப்பட்ட பங்கில் விவசாயக் கேணி உள்ளது. 

தங்கராசுக்கு பிரிக்கப்பட்ட நிலத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது. ஆழ்துளை கிணற்றுக்கும் கேணிக்கும் சேர்த்து ஒரு இலவச விவசாய மின் இணைப்பு மட்டும் உள்ளது. ஒரு இலவச மின் இணைப்பு பெற்று இரண்டு இடங்களிலிருந்து தண்ணீர் எடுப்பதாக மின்வாரியத்துக்கு வந்த புகாரின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை செய்து தங்கராசுவுக்கு அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர். மேலும் தங்கராசு தனியாக பயன்படுத்தி வந்த மின் இணைப்பினைக் கடந்த 7.6.2024 அன்று வணிக பயன்பாட்டுக்கும் மாற்றி உள்ளனர்.

பின்பு கடந்த 25 ஆம் தேதி தங்கராசுவின் தொலைபேசிக்கு AD பேசுகிறேன் என்று சொல்லி உன் மீது சுமதி என்பவர் புகார் கொடுத்துள்ளார். நீ தொட்டியம் ஆபீசுக்கு வந்து என்னை பார் என்று கூறியுள்ளார்.  அதன் பேரில் மறுநாள்(26. 6 .2024) மதியம் 3 மணியளவில் தொட்டியத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் சென்று  அங்கிருந்த ஏ.டி திருமாறன் என்பவரை சந்தித்துள்ளார். அப்போது ஏ.டி திருமாறன் உனக்கு டேரிஃப் சேஞ்ச் பண்ணிக் கொடுத்ததற்கும் நீ எனக்கு எதுவும் தரல, இப்ப சுமதி என்பவர் உன் மேல புகார் கொடுத்து இருக்காங்க. அந்தப் புகார உனக்கு சாதகமாக எழுதி அனுப்ப வேண்டும். அதனால எனக்கு 2000 ரூபாய் கொடுத்துவிடு என்று கேட்டுள்ளார்.  

அதற்கு தங்கராசு பணம் தயார் செய்து கொண்டு உங்களை வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கராசு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்தப் புகாரின் பேரில் டி.எஸ்.பி மணிகண்டனின் ஆலோசனையின் பேரில் இன்று(2.7.2024) மதியம் சுமார் ஒன்றரை மணி அளவில் தொட்டியம் ஏடி திருமாறன் தங்கராசுவிடம் இருந்து 2000 ரூபாய் லஞ்சப் பணத்தை கேட்டுப் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் டிஎஸ்பி மணிகண்டன் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், பிரசன்ன வெங்கடேஷ் அடங்கிய குழுவினர் ஏடி திருமாறனை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்