சென்னையில் பேருந்து நிழற்குடையை மாற்றி அமைக்கும் பொழுது ஏற்பட்ட மின் விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதி 16வது வார்டில் திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்புறம் பேருந்து நிறுத்த நிழற்குடை ஒன்று இருந்தது. அந்த நிழற்குடையை இரவோடு இரவாக நேற்று மாற்று இடத்தில் வைப்பதற்கான பணி நடைபெற்றது. ஆனால் பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இன்று காலை மாற்று இடத்திலிருந்து பழைய இடத்திற்கே மீண்டும் பேருந்து நிழற்குடையை நடுவதற்கான பணி நடைபெற்று வந்தது.
இதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு நிழற்குடையானது பழைய இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த பணியில் ஏராளமான மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கிரேன் மேலே இருந்த மின்சாரக் கம்பியின் மீது உரசியது. இதனால் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் நான்கு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக கிரேன் கீழே இறக்கப்பட்டது. பலத்த காயமடைந்த நான்கு ஊழியர்களும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.