Skip to main content

“பாஜகவுக்கு பாடம் புகட்டக்கூடிய வகையில் அமைந்தது தேர்தல் தீர்ப்பு” - திருமாவளவன் எம்.பி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Election verdict is a lesson for BJP says Thirumavalavan MP

சிதம்பரம் அறுபத்துமூவர் நாயன்மார் மடத்தில் திமுக கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் வெற்றிக்கு பாடுபட்ட சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வியாழக்கிழமை(13.6.2024) நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்து பேசியது: தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்தார். அதன்படி தமிழ்நாட்டு மக்கள் 40 தொகுதிகளிலும் வெற்றியை தந்துள்ளார்கள். வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவோம் என்று மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முயற்சியில் இது நடைபெற்றது. ஆனால் தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு வெற்றி பெற்ற நிலையில், அகில இந்திய அளவில் நாம் கனிசமான வெற்றியைப் பெற்றோம். மத்தியில் ஆட்சி அமைக்ககூடிய வகையில் வெற்றி பெறவில்லை என்றாலும் பாஜகவிற்கு பாடம் புகட்டக்கூடிய வகையில் தேர்தல் தீர்ப்பு அமைந்தது. கடந்த முறை பெற்ற வெற்றியை பெற முடியாமல் பாதிப்பை சந்தித்துள்ளனர். 63 இடங்களை இழந்துள்ளனர். இந்த 240 இடங்களில்தான் தனித்து வெற்றி பெற முடிந்தது. அகில இந்திய அளவில் பாஜகவை மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.

தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு மறைமுகமாக அறிவுரை சொல்லுவது போல் உள்ளது. நீங்கள் பக்குவம் பெற வேண்டும், ஒற்றுமை அடைய வேண்டும், வலிமைப் பெற வேண்டும். அதற்கு முன்னதாக உங்கள் கையில் ஆட்சியைக் கொடுத்தால், சரியாக இருக்காது எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களை நீங்களே வலிமை படுத்தி கொள்ளுங்கள் என்ற அறிவுரை சொல்வது போல இந்தியா கூட்டணிக்கு வாக்களித்துள்ள இந்திய வாக்காள சமூகம். ஒரு புறம் பாஜகவிற்கு பாடம் புகட்டியுள்ளது. மற்றொரு புறம் இந்தியா கூட்டணியை வலிமை படுத்தி கொள்ளுங்கள் என வாய்ப்பு அளித்துள்ளது. 

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழ்நாட்டில் 40க்கு 40ம் வெற்றி பெற்று மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. அதற்கு முழு பொறுப்பு முதல்வர் ஸ்டாலின்தான். 2019 முதல் தற்போதையுள்ள திமுக கூட்டணித் தொடர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என வெற்றி பெற்று வந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாகவும், புரிந்துணர்வோடும் உள்ளது. கொள்கை அடிப்படையில் உள்ளது. அதுதான் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதிகளில் மட்டும் 1 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெறுவோம் எனக் கூறினார். அந்த 1 லட்சம் வாக்குகள் வித்தாயாசத்தில் நான் வெற்றி பெற்றேன். அதற்குக் காரணம் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் செயல்திறன் மற்றும் உக்திதான் காரணம் என்றார் தொல்.திருமாவளவன்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “சிதம்பரம் தொகுதியில் 32 ஆயிரம் வாக்குகளும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகளும், புவனகிரி தொகுதியில் 22 ஆயிரம் வாக்குகளும் பெற்றுள்ளோம். 1 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளோம். இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் வரவுள்ளது. எனவே திமுகவினர் தற்போதே பணியாற்ற தொடங்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 40-க்கு 40 தொகுதிகள் வெற்றி பெற்ற கூட்டணி திமுக கூட்டணிதான்” என்றார்.

கூட்டத்தில் விசிக பொதுச்செயலாளர் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ வாழ்த்துரையாற்றினார். மேலும் கூட்டத்தில் கடலூர் மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.கதிரவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரங்க. தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன், பால.அறவாழி, இந்திய கம்யூ கட்சி மாநிலக்குழு மணிவாசகம், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, மதிமுக வழக்குரைஞர் கே.வி.மோகனசுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகர செயலாளர் ராஜா, நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், திமுக மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அப்புசந்திரசேகரன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், விஎன்ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திமுக நகர துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், இளங்கோவன், நகரமன்ற உறுப்பினர்கள் ஏஆர்சி.மணிகண்டன், சி.க.ராஜன் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்