Skip to main content

நள்ளிரவில் சோதனை; மொட்டை மாடியில் கொட்டிக்கிடந்த பணக் கட்டுகள் - பறக்கும் படை அதிரடி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Election flying troops seized money in shackles near Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் 3 தேர்தல் பறக்கும் படையினர் நடராஜனின் வீட்டைச் சோதனையிட முயன்றனர்.

நீண்ட நேரம் ஆகியும் வீட்டைத் திறக்காததால் காவல் துறையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரமாக போராடினர். ஆனாலும், நடராஜன் வீட்டார் கதவை திறக்காததால் காவல் துறையினர் மொட்டை மாடியில் ஏறி சோதனை மேற்கொண்ட போது, மொட்டை மாடியில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் சிதறிக் கிடந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்தனர். 

பின்னர் உள்ளூர் ஆட்கள் உதவியுடன் நடராஜன் வீட்டைத் திறந்து சோதனை செய்தனர். அப்போது 2 பீரோக்களை உடைத்து சேதனை செய்ததில் மேலும் 5 லட்சம் இருந்தது தெரியவந்தது.  இது தொடர்பாக வீட்டில் இருந்த நடராஜன் - விமலா ஆகிய வயதான தம்பதியரிடம் மேற்கொண்ட விசாரணையில் இது தங்கள் சொந்தப் பணம் என தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் கைபற்றப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் 7 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கே.வி.குப்பம் வட்டாட்சியரிடத்தில் ஒப்படைத்தனர்.  மேலும் அப்பகுதியில் உள்ள காலி இடங்கள், வைக்கோல் கட்டுகள், புதர்கள் ஆகிய இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். 

மேலும் கைபற்றப்பட்ட பணம் தொடர்பாக காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் கடைக்கோடி கிராமத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், வேலூர் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்