Skip to main content

புகார் சொன்ன அண்ணாமலைக்கு பாடம் எடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

 Election Commission of India AND BJP STATE LEADER ANNAMALAI TWEETS

 

பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை (22/02/2022) காலை 08.00 மணிக்குத் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செய்து வருகிறது.

 

இந்த நிலையில், தேர்தல் நாளன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடிக்கு அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறி, இது தொடர்பான காணொளியையும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன், ”தேர்தல் நாளன்று எதுவும் நடக்கவில்லை என்று தி.மு.க. அரசு கூறுகிறது. இந்தக் காணொளி மூலம்,  தமிழகத்திலே எந்த அளவுக்கு ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்! வாக்கு எண்ணும் தினத்திலாவது தேர்தல் ஆணையம் தன் கண்களை மூடிக் கொள்ளாமல் இருப்பார்களா?" என்று குறிப்பிட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் ஐடியை மென்ஷன் செய்திருந்தார்.

 

அண்ணாமலைக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், "கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை நடத்துவது நாங்கள் இல்லை. அதற்கான அதிகாரமும் இல்லை. இவை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 243K மற்றும் 243ZA- ன் கீழ் தனி அதிகாரிகளால் அதாவது மாநில தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை சம்மந்தப்பட்ட மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. 

 

 

அண்ணாமலையின் கேள்விக்கு தேசிய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள இந்த பதிலை ஆளும் கூட்டணியை சேர்ந்த தொண்டர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்