வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (01/08/2022) காலை 11.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதன் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்திற்கு முதல் நபராக ஒரு மணி நேரத்திற்கு முன்பே கோவை செல்வராஜ் வந்திருந்த நிலையில், அதன் பின்னர், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வந்தனர். அப்போது, கோவை செல்வராஜ் அருகில் இருந்த அ.தி.மு.க. என்ற பெயர் பலகையை தனது இருக்கை அருகில் எடுத்து வைத்துக் கொண்டார். எனினும், அ.தி.மு.க. பிரதிநிதிகள் அனைவரும் அருகருகே அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல்- ஆதார் இணைப்பை வெற்றிகரமாக முடிப்பது குறித்தும், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.