கரோனா பரவல் அதிகம் உள்ள நேரத்தில் கூட தூய்மைப் பணியாளர்கள் விடுப்பு இல்லை. இவர்களுக்கு அனைத்து நாட்களும் பணி நாட்கள் தான். விடியும் முன்னே நகர வீதிகளை கூட்டி சுத்தமாக்கினார்கள். இந்த காலக்கட்டத்தில் மட்டும் இவர்களை போற்றினார்கள். பல ஊர்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு கால் கழுவி பாத பூஜை கூட செய்தார்கள்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஒவ்வொரு மாவட்டத்துக்கு செல்லும் போதும் தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செய்து அவர்களுக்கு தரமான முகக்கவசம், கையுறை வழங்க வேண்டும் என்று அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார். ஆனால் எந்த அதிகாரியும் அதை நடைமுறைப்படுத்தியதாகத் தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரமான பட்டுக்கோட்டையில் சில தூய்மைப் பணியாளர்கள் சாக்கடை வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய காலில் செப்பல் கூட இல்லாமல், சாக்கடை வாய்க்காலுக்குள் இறங்கி சாக்கடைக் கழிவுகளை மண்வெட்டியால் அள்ளிக் கொடுக்க மற்றொருவர் அந்த சாக்கடை மண்ணை வெளியே வாங்கிக் கொட்டினார். இவர்களிடம் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை. இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு உபகரணம் எதையும் கொடுக்கவில்லை என்பது தான் வேதனை. ஆயிரக்கணக்கான மக்களைக் காக்க எந்த பாதுகாப்புமின்றிக் கடமையை செய்து முடித்தனர். இனிமேலாவது தூய்மைப் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி அவர்களது பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.