நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.