ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரிசாவில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''என்னையும் அமைச்சர் சிவசங்கர் அவர்களையும் கிளம்பிபோக சொன்னார்கள். நாங்கள் நேரடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றோம். பின்னர் மருத்துவமனைக்கும் சென்றிருந்தோம். அங்குதான் காயம்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு கூட்டிச் சென்றார்கள். அங்கு விசாரித்தோம் அங்கு தமிழர்கள் இல்லை. அங்கிருந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம்.
அவர்களின் கணக்குப்படியும் தமிழர்கள் அங்கு பாதிக்கப்படவில்லை என தெரியவந்தது. அதன் பிறகு தமிழக முதல்வரிடம் சூம் காலில் பேசும் பொழுது 28 பேர் மட்டும் டிராவல் செய்து உள்ளார்கள் என தகவல் கிடைத்தது. ஒடிசா அரசு கால் சென்டர் மாதிரி ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். எட்டு பேரை மட்டும் ரீச் பண்ண முடியாமல் இருந்தது. சமீபத்தில் எங்களுக்கு கிடைத்த கணக்குப்படி அங்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் தெரிவித்ததில் இரண்டு பேரை ட்ரேஸ் பண்ணியாச்சு. அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்திக் ஆகிய ஆறுபேரின் நிலை குறித்து அறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. நம்முடைய அரசு அதிகாரிகள் அங்கு தான் தங்கி இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்ல செய்திகள் வரும் என நம்புகிறோம்''என்றார்.