மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை காரணமாக 22,300 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில், 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையாக அவர்கள் பயிலக் கூடிய வகுப்பு, படிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு 1,000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2013 ஆண்டு நிதியாண்டில் இருந்தே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திட்டத்தை ஆய்வு செய்து அவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து இந்த கோரிக்கை பரிசீலனையில் இருந்த நிலையில் 2023-24 நிதியாண்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் செலவு ஏற்பட்டாலும் இரண்டு மடங்காக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்கிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 3000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாக உயர்கிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு கல்வி உதவித் தொகை 4,000 ரூபாய் இருந்து 8000 ரூபாயாக உயர்கிறது. பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 6000 ரூபாய் இனி 12000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தொழிற்கல்வி, முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 7,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.