தமிழக கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் பதவியில் இருந்த 3 அதிகாரிகளை நேற்று இடமாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை.
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக இருந்த குணசேகரன், தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இந்த பதவியில் இருந்த கணேசமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட அருள்செல்வம், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா பிறப்பித்திருக்கிறார்.
தமிழகத்தில் மே மாதம் 5-ந்தேதி முதல் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது. கரோனா தாக்குதலின் நெருக்கடிகள் இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முதல் திருப்புதல் தேர்வு நடந்த போது பல பாடங்களின் கேள்வித்தாள் முன்கூட்டியே லீக் ஆனது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பானது. சர்ச்சைகளை ஏற்படுத்தின.
“கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தை தீவிரமாக விசாரித்தது பள்ளிக்கல்வித்துறை. அந்த விசாரணையின் முடிவுகளின் படி, லீக் விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது பள்ளிக்கல்வி துறை. இதனைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சூழலில்தான் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக அருள்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்கிறார்கள் பள்ளிக் கல்வித்துறையினர்.