புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தொடக்க நடுநிலைப் பள்ளிகள் செயல்படத் தொடங்கினாலும் பல இடங்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டியதால் பள்ளிகள் பூட்டப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் வந்து பார்த்துவிட்டு வீடு திரும்பினார்கள். இந்த நிலையில்தான் புதுக்கோட்டையில் தைலாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காத்திருந்த மாணவர்களுக்காக இணை இயக்குநர் முன்னிலையில் பள்ளியின் பூட்டை உடைத்து பள்ளியினைச் செயல்பட நடவடிக்கை எடுத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா.
கடந்த 22 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகள் முழுவதும் செயல்படத் தொடங்கின. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் திரும்பினார்கள். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குநர் (பாடத்திட்டம்) பொன்.குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா ஆகியோர் காலை 9.45 மணி அளவில் பார்வையிடச் சென்ற போது அப்பள்ளியின் கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா இணை இயக்குநர் முன்னிலையில் அப்பள்ளியின் பூட்டை உடைத்து அப்பள்ளிக்கு ஆசிரியர் பயிற்சி மாணவியர்களை வரவழைத்து பள்ளி செயல்பட நடவடிக்கை எடுத்தார். கல்வித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பல பள்ளிகளில் ஆசிரியர்கள் காலையில் வந்திருந்தாலும் மதியம் வரை பலர் கையெழுத்து போடாமல் பணியில் இருந்தனர்.