Skip to main content

பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 


பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக தனி சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க, தலைமை நீதிபதிக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

c


சேலம் மாவட்டம் எடப்பாடியில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் திறப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடந்தது. 


புதிய நீதிமன்றத்தை விஜயா கே.தஹில்ரமணி திறந்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:   எடப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் எல்லைகளைக் கொண்டதாக இருக்கும். சங்ககிரி முன்சீப் நீதிமன்றத்தில் இருந்து 531 வழக்குகளும், சங்ககிரி குற்றவியல் நீதிமன்றங்கள் இரண்டிருந்தும் 377 வழக்குகளும் என மொத்தம் 908 வழக்குகள் எடப்பாடி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட உள்ளன. இதன்மூலம் இப்பகுதிகளில் வழக்கு தொடுத்தோருக்கு குறித்த காலத்தில் நீதி கிடைக்கும். 


மாநிலத்தின் உயரிய அமைப்பு சென்னை உயர்நீதிமன்றம். இதன் கிளை மதுரையில் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சென்னையில் 126, இதர மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. 


நடப்பு பட்ஜெட்டில் நீதி நிர்வாகத்திற்காக 1265.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் மேலும் பல புதிய நீதிமன்றங்கள் கட்டப்பட உள்ளன.


வழக்குரைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பணியில் இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநலநிதி 7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை 4 கோடியில் இருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 220 சிவில் நீதிபதிகள் நேரடியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழக அரசின் தொடர் முயற்சியால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


நீதித்துறை முற்றிலும் மின்னணு ஆளுமைத் தொழில்நுட்பத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக புதிதாக 1188 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 


பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யும். 


நாங்கள் ஆசிரியர்களையும், நீதிபதிகளையும் மிகவும் மதிக்கிறோம். அவர்களை கடவுளுக்குச் சமமானவர்களாக கருதுவோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சார்ந்த செய்திகள்