அதிமுகவில் நிகழ்ந்து வந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவிக்குக் கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்ததையும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் சார்பில் 5 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், நீதிபதிகள் சகாதேவன் மற்றும் சவிக் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில், “பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தீர்மானங்களுக்குத் தடை விதிக்க முடியாது. தீர்மானங்களுக்குத் தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்” என்று கூறி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இபிஎஸ், “இந்த தீர்ப்பு நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு. எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் நியாயப்படி தீர்ப்பும் கிடைத்திருக்கிறது. இந்தியாவே திரும்பி பார்க்கக்கூடிய அளவுக்கு மதுரையில் மாநாடு நடத்தி முடித்தோம். தென் மாவட்டத்தில் மாநாடே நடத்த முடியாது என்று சொன்னார்கள். ஆனால் 15 லட்சம் பேரைக் கூட்டி மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடித்துவிட்டோம். அதனால் அதிமுகவினர் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். இனியாவது பிளவு ஏற்பட்டு விட்டது என்று கூறுவதை நிறுத்திவிடுங்கள். தற்போது நீதிமன்றமும் தீர்ப்பும் அளித்துவிட்டது. இனியாவது இதுபோன்ற செய்திகளை நிறுத்திவிட்டு அதிமுக பற்றிய உண்மை செய்திகளை சிந்தாமல் சிதறாமல் போடுங்கள். ஏற்கனவே சொன்னதுபோல் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யார் வந்தாலும் கட்சி அவர்களை ஏற்றுக்கொள்ளும்” என்றார்.
இதையடுத்து சந்திரயான் குறித்த கேள்விக்கு, “சந்திரயான் 3 வெற்றி நாட்டிற்குக் கிடைத்த பெருமை; அதிலும் நம் தமிழர் ஒருவர் தலைமை தாங்கி இந்த திட்டத்தை நடத்தியிருக்கிறார். அவருக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்கள்” என்றார்.