திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வேலூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், சிறுகுறு நிறுவனத் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிம்மொழி, தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவை எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ''பிரதமர் மோடி இரண்டு தேர்தலுக்கு முன்னால் 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவர் வங்கி கணக்கிற்கும் வரும் என்றார். அது வரும் என்று இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாருடைய வங்கி கணக்கிலும் அதைப் போட்ட பிறகு தமிழக பாஜக பேசட்டும். தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அது தெரியாது. ஏனென்றால் ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்தால் தானே தேர்தல் அறிக்கை பற்றி எல்லாம் புரியும்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி, செய்யாறு சிப்காட் குறித்து தமிழக அரசு விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கும் எனவும் தெரிவித்தார்.