சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி சட்டத்தின்படி ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய முதலமைச்சர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்காததன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து 36 மாதங்களாக கொலை, கொள்ளை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
29/5.2024 அன்று சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரே இரவில் ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுகிறது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மது போதையில் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவர்களுக்கிடையே வெட்டுக்குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அம்பத்தூரில் நடைபெற்ற போதை மாத்திரை விற்பனை அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ள முடியாத அளவிற்கு சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இதுபோன்ற சட்ட ஒழுங்கு சார்ந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக முதலமைச்சர் தமிழக காவல்துறைக்கு இனியாவது சுதந்திரம் வழங்கி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 36 மாதங்களில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கைகளை விட சமூக விரோதிகளின் கைகளே ஓங்கி இருக்கிறது' எனக் குற்றம்சாட்டியுள்ளார்.