பணிக்கு வராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து புதன்கிழமை (அக். 30) இரவு சேலம் வந்து சேர்ந்தார். இன்று (அக். 31) காலை ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது. அமைச்சர்கள் நான்கு நாள்கள் அங்கேயே தங்கி பணியாற்றினர். தீபாவளி, மழையை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டனர். எனினும், சிறுவனை உயிருடன் மீட்க முடியாதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
முடிந்தவரை அரசு போராடியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து அரசை விமர்சிப்பது சரியாகாது. சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்தினரை அழைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். தேசிய பேரிடர் மீட்புப்படை (என்டிஆர்எப்) என்பதே துணை ராணுவம்தான். நாம் மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மூலமும் பணிகளில் ஈடுபட்டோம். இத்துடன் எல்லோரும் இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். ஆழ்துளை கிணறுகள் குறித்து ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பலரும் பணிக்கு திரும்பி விட்டனர். அரசால் அங்கீகரிக்கப்படாத சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தான் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை அரசு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பணிக்கு வர மறுக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும்.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரையும் அரசு 1.24 கோடி ரூபாய் செலவு செய்து படிக்க வைக்கிறது. இது மக்களின் வரிப்பணம். மருத்துவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கிறது. மருத்துவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை அளித்தால் எப்படி நிறைவேற்ற முடியும்? போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.