பெண் நிருபரை ஆளுநர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் முகநூலில் வந்த கடுமையான விமர்சனம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் விடுத்துள்ள புகார் மனு:
’’அசிங்கம் பிடித்த கேவலமான பிறவிகள், படிப்பறிவில்லாத, கேவலமான பொது அறிவில்லாத பொறுக்கிகளே தமிழகத்தில் மீடியாவிற்கு வேலைக்கு வருகிறார்கள் என்றும், பெரிய ஆட்களுடன் படுக்காமல் ஒரு பெண்ணால் செய்தியாளராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ ஆக முடியாது என்றும், பல்கலைக்கழகங்களில் விட மீடியாக்களில் தான் அதிகளவில் செக்ஸூவல் நடக்கிறது எனவும் ஊடகத்துறை மீதும், பெண் ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறுகளை அள்ளி வீசி ஊடகத்துறையில் உள்ள பெண்களின் நடத்தையை களங்கப்படுத்தும் நோக்கிலும், கவர்னர் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான விவகாரத்தில் அந்த பெண் செய்தியாளர் மீது சாதி வன்மத்தை தூண்டும் வகையிலான கருத்தையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் மீது சாதி வன்கொடுமை தடைச்சட்டம், பெண்கள் வன்கொடுமை தடைச் சட்டம், பெண்களை இழிவுபடுத்துதல், அவதூறு கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளிலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்’’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் இன்று (20.04.2018) புகார் மனு அளிக்கப்பட்டது.