
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (டிச.16) சேலத்தில் மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் புதிதாக 2,000 மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று (டிச. 14) தொடங்கிவைத்தார். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதிகள் உடனுக்குடன் கிடைக்கும் நோக்கில், இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மணியனூரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்கை முதல்வர் நாளை மறுநாள் (டிச.16) நேரில் திறந்துவைக்கிறார். இதற்காக அவர் நாளை (செவ்வாய்) மாலை சேலம் வருகிறார். நாளை காலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் சேலம் வருகிறார்.
இரவு, நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுக்கும் அவர், மறுநாள் காலை கரூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அன்று பகல், 3 மணியளவில் சேலம் திரும்பும் அவர், மணியனூரில் மினி கிளினிக்கை திறந்து வைத்துப்பேசுகிறார்.
அன்று இரவு சேலத்தில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், டிச. 17ஆம் தேதி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குச் செல்கிறார். அங்கு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அன்று இரவும் சேலத்தில் தங்கி ஓய்வெடுக்கிறார். பிறகு டிச. 18ஆம் தேதி காலை சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
முதல்வர் வருகையையொட்டி சேலத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியினர் உற்சாக வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.