அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தொடர்ந்து அ.தி.மு.க.வின் தலைமை குறித்த பிரச்சினை, அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்நிலையில், தற்பொழுது அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அ.தி.மு.க.வின் தலைமை குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் சாலை மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரியகுளம் பகுதியில் அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போஸ்டரை ஒட்டிய நபரான சுரேஷ் என்பவரை விசாரித்தபோது அவர் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதாகவும், தற்போது அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பிலும் இல்லாத சாதாரண ஒரு தொண்டனாக இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.