சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
உள்ளாட்சி தேர்தலுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் நடத்துவதற்கென தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் தேர்தலை நடத்துவார்கள். கால அவகாசம் குறைவு என்பதால் முன்னதாகவே விருப்பமனு வாங்குகிறோம். அமமுகவில் இருந்து பலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம்கூட எடப்பாடி, சேலம் சட்டமன்ற தொகுதியில் அமமுகவில் இருந்து விலகி நிறைய பேர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள்.
அமமுக இன்னும் அரசியல் கட்சியாகவே பதிவுசெய்யப்படவில்லை. அப்படியிருப்பிக்க அதில் உள்ளவர்கள் பல கட்சிக்கு போக தூதுவிட்டு வருவதாக கேள்விப்பட்டேன்.
ரஜினி வெற்றிடம் வெற்றிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். கமல் பெரிய தவைவர் தானே ஏன் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடவில்லை. வயது முதிர்ந்துவிட்டது. வயது 65, 66 ஆகிவிட்டது. திரைப்படத்திலே தகுந்த வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி ஆரம்பிக்கலாம் தவறில்லை. ஆனால் மற்றவர்களை குறை சொல்லி பேசுவதுதான் தவறாக இருக்கிறது. இத்தனை காலமாக எங்கே போனார்கள். நாங்கள் எடுத்தவுடன் அரசியலுக்கு வரவில்லை. கிட்டத்தட்ட 45 ஆண்டு காலம் கட்சி பணியில், களப்பணியில், பல மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்று மக்கள் ஆதரவை பெற்று இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறோம். ஆனால் ரஜினி, கமல் ஆகியோர் மக்களுக்கு என்ன பணி செய்தார்கள்.
திரைப்படத்தில் நடித்தார்கள் வருமானத்தை ஈட்டிக்கொண்டார்கள். இன்றுவரை படத்தில் நடித்துக்கொண்டும், வருமானம் ஈட்டிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் மக்களிடம் ஏதோ செல்வாக்கு இருப்பதை போன்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை விட பெரிய நடிகர் சிவாஜி கணேசனுக்கே தேர்தலில் என்ன நிலை ஏற்பட்டது என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். அவர்களைவிட இவர்கள் பெரிய நடிகர்கள் அல்ல. எம்ஜிஆருக்கு அடுத்தகட்டத்தில் இருந்த நடிகர் சிவாஜி கட்சி தொடங்கி அவருக்கு ஏற்பட்ட நிலைதான் இவர்களுக்கு ஏற்படும்.
கமல்ஹாசன் ஒரு முன்னேற்பாடை செய்துகொண்டார். அவர் கட்சி தொண்டர்கள் மட்டும் அவரது படத்தை பார்த்தால் போதும் என நினைத்துவிட்டர். எனவேதான் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். கமலுக்கு என்ன தெரியும் அரசியலில். எத்தனை ஊராட்சி மன்றம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அந்த பகுதி மக்கள் யார் என என்ன அடிப்படை தெரியும். அடிப்படையே தெரியாமல் தலைவர் மாதிரி தன்னை உருவாக்கி கொண்டார்கள்.
திரைப்படத்தில் நடித்தார்கள் பணம் ஈட்டினார்கள் அதைவைத்து அரசியலில் பிரவேசம் செய்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பித்தால் பார்க்கலாம் யூகத்தில் எதுவும் சொல்ல இயலாது என கூறினார்.