அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம்,கோடாலிகருப்பூர் ஊராட்சி,வக்காரமாரி காலனியை சேர்ந்த முருகேசன் மனைவி மாரியம்மாள் என்பவர் நேற்றைய தினம் இயற்கை எய்தினார். இந்நிலையில் அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அவரது இல்லத்திலிருந்து உடலை ஊர்வலமாக எடுத்து வந்து கொண்டு இருந்தனர் ஊர்மக்கள்.
அங்குதான் அந்த கொடுமை சம்பவம் அரங்கேறியது. சுதந்திர இந்தியாவில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வி எழுந்தது. வக்காரமாரி கிராமத்திலுள்ள காலனி தெருவில் இருந்து மயானத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இரண்டு வாய்க்கால்களை கடந்து செல்ல வேண்டும். தண்ணீர் இல்லாத காலங்களில் அவர்களுக்கு சிரமம் தெரியாது, தற்போது மேட்டூர் அணை நிரம்பிய நிலையில்,தா.பழூர் பகுதி பாசனத்திற்கு பொன்னாறு வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி சென்று கொண்டிருக்கிறது.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் வரும் பொழுது,கிராமத்தில் இறப்பவர்களின் சடலத்தை தண்ணீரில் மிதந்து கடந்து அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
இந்நிலையில் நேற்று இறந்த பெண்மணியின் உடலை ஊர்மக்கள் சுமந்துகொண்டு, அந்த வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் நீந்தி, மிதந்து, கடந்து, தத்தளித்து ஒருவழியாக அடக்கம் செய்த சம்பவத்தை பார்த்த அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது. சுதந்திர இந்தியாவில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியையும் எழச் செய்தது. காலம் காலமாக அப்பகுதி மக்கள் படும் துன்பத்திற்கு ஆளும் தமிழக அரசு முடிவு கட்டுமா? அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பி காத்திருக்கின்றனர்.