சென்னை புழல் சிறையில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை, அமமுக துணைப்பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான தினகரன் நேற்று சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தற்போதைய அரசு காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துகிறது. தூத்துக்குடியில் நடந்தது படுகொலை சம்பவம். அதனை படுகொலை என்று சொன்னால் கத்துகிறார்கள். தூத்துக்குடி போவதற்கு தைரியம் இல்லாதவர்கள் சட்டப்பேரவையில் நரிபோல் ஊளையிடுகிறார்கள். நரிபோல் ஊளையிடுகிறார்களே என்று கேட்டால் அதற்கு சபாநாயகரிடம் பதில் இல்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்தினமே அப்போது அங்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் தன்னுடை குடும்பத்தினரை தன்னுடைய சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் என்று ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அப்படியென்றால் இவர்கள் எதை எதிர்பார்த்து இருந்தார்கள்.
விஷமிகள் கலவத்தை தூண்டிவிடுகிறார்கள் என்றால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இவர்கள் எடுக்காமல், மக்களால் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த கல்லூரி மாணவி வாயில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என்கிறார்கள். தூத்துக்குடியில் நடைப்பெற்றது ஜாலியன் வாலாபாத் படுகொலை போன்ற சம்பவம்தான்.
முதலமைச்சர் சட்டப்பேரவையில் வாய் சவடாலாக பேசுகிறார். ஆனால் இதுவரை தூத்துக்குடி பக்கமே போகவில்லை. பழனிசாமி உண்மையிலேயே தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்தால், நாங்கள் எப்படி தூத்துக்குடியில் தெருத் தெருவாக சென்றோமோ, அதுபோல போகச்சொல்லுங்கள். இறந்தகவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம் ஆறுதல் சொல்லிவிட்டு வரவேண்டும். அதையெல்லாம் செய்யாமல் இங்கேயே உட்கார்ந்து கொண்டுள்ளார்.
காவல்துறையினரை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ தூத்துக்குடிக்கு செல்கிறார்கள். அதுதான் இன்றைக்கு இந்த அரசாங்கத்தின் நிலைமை. 33 அமைச்சர்களும் பாதுகாப்புக்கு காவல்துறையினரை வைத்துக்கொண்டாவது வீடுவீடாகச் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வரச்சொல்லுங்களேன். அதன் பிறகு இந்த அரசாங்கத்தைப் பற்றி பேசுவோம். இவ்வாறு கூறினார்.