துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்று எடப்பாடி தலைமையிலான அரசு பதவி விலகக் கோரி 26.05.2018 சனிக்கிழமையன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் அமைந்துள்ள உயிர்க்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரை கொலை செய்த பினாமி அரசு, இப்போது வரை அதன் குற்றத்தை உணர்ந்து கொள்ளவில்லை. மாறாக, உரிமை கோரி போராட்டம் நடத்திய மக்களை வன்முறையாளர்களாக அரசு சித்தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 41-ஆவது நாளில், அதாவது சரியாக இரு மாதங்களுக்கு முன் இதே நாளில் மார்ச் 24-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் கலந்து கொண்டனர். அப்போராட்டத்தின் போது பொது அமைதிக்கோ, ஒழுங்குக்கோ சிறிதும் பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோல், போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த 22&ஆம் தேதி போராட்டக்குழு அறிவித்திருந்த முற்றுகைப் போராட்டத்தையும் அரசு அனுமதித்திருந்தால் பொதுமக்கள் சில மணி நேரம் முற்றுகையிட்டு கலைந்து சென்றிருப்பார்கள். ஆனால், இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக தமிழக அரசும், காவல்துறையும் அனைத்து வகையான அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டன. இது தான் வன்முறைகளுக்கு முக்கியக் காரணமாகும்.
ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைக்கும் பினாமி ஆட்சியாளர்கள் பொதுமக்கள் தான் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சில கட்சிகளின் தூண்டுதலால் தான் தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தியதாகவும், பொதுமக்கள் சட்டவிரோதமாக தாக்குதல் நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் அதனால் தான் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறியிருக்கிறார். இது மிகவும் அபத்தமான குற்றச்சாற்று.
யூதர்கள் படுகொலையை ஹிட்லரும், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையை தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் இராஜபக்சேவும், உகாண்டாவில் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டதை இடி அமீனும் எவ்வாறு நியாயப்படுத்தினார்களோ, அதேபோல் தான் தூத்துக்குடியில் போராடிய அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த பினாமி எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார். மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. இத்தகைய போக்கை எந்தக் காலத்திலும் அனுமதிக்க முடியாது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகூம் கூட பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோபத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை மூடி மறைக்கும் முயற்சியில் தான் தமிழக அரசு ஈடுபடுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான அனைத்து அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்; இந்நிகழ்வு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்; இதற்கெல்லாம் மேலாக துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்று எடப்பாடி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் 26.05.2018 சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் நாளை மறுநாள் காலை நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சேலத்திலும், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் மதுரையிலும், பொருளாளர் திலகபாமா விருதுநகரிலும் நடைபெறும் போராட்டங்களுக்கு தலைமையேற்பார்கள். மற்ற இடங்களில் பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் தலைமையில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.