மதுரையில் கரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்வை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘பிரதமரின் தீவிர முயற்சியால், தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தடுப்பூசி தற்போது தமிழகத்தில் வழங்கும் பணி துவக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் 266 இடங்களில் ஒத்திகை முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது 366 இடங்களில் தடுப்பூசி வழங்கும் பணி நடக்க உள்ளது. இதில் முதல் கட்டமாக 166 இடங்களில் போடப்படுகிறது. தற்போது முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
முதல் தடுப்பூசி போட்ட 28வது நாளில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாவது தடுப்பூசி செலுத்திய பிறகு 14 நாட்கள் என மொத்தம் 42 நாட்கள் ஊசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஊசி போடும் நிகழ்ச்சி துவங்கி உள்ளது. முதற்கட்டமாக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 20,000 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. இவை மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் தடுப்பூசியை தமிழக மருத்துவ சங்கச் செயலாளர் செந்தில் போட்டுக்கொண்டார். மருத்துவத் துறை, சுகாதாரத் துறைகளைச் சார்ந்தவர்கள் தற்போது ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது.
டெல்லியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தடுப்பூசி வழங்கும் பணியை துவக்கி வைத்துள்ளார். தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி துவங்கப்பட்டு வருகிறது; தமிழகத்தில் தற்போது துவங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 650 க்கும் கீழ் குறைந்துள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சமூக விலகலை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, வழக்கம் போல் கைகளைச் சுத்தமாக கழுவி வந்தால் நோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும்’ என்றார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.