தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது.

அதன்படி கடலூர் ஊராட்சி ஒன்றிய வாக்கு பெட்டிகள் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியிலும், விருத்தாசலம் ஒன்றியத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியிலும், பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றிய வாக்குப்பெட்டிகள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும், குறிஞ்சிப்பாடி ஒன்றிய வாக்கு பெட்டிகள் எஸ்.கே.வேலாயுதம் பள்ளியிலும், மேல் புவனகிரி ஒன்றியம் வாக்குப்பெட்டிகள் மேல்புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பரங்கிப்பேட்டை ஒன்றியம் வாக்குப்பெட்டிகள் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியிலும், மங்களூர் ஒன்றிய வாக்கு பெட்டிகள் திட்டக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கம்மாபுரம் ஒன்றியம் வாக்கு பெட்டிகள் வடலூர் வள்ளளர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியிலும், மங்களூர் ஒன்றிய வாக்குப் பெட்டிகள் திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காட்டுமன்னார்கோவில் ஒன்றிய வாக்குப் பெட்டிகள் உடையார்குடி உயர்நிலைப் பள்ளியிலும், குமராட்சி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் சிதம்பரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கீரப்பாளையம் ஒன்றிய வாக்குப்பெட்டிகள் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நல்லூர் ஒன்றிய வாக்கு பெட்டிகள் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய வாக்கு பெட்டிகள் ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்.ஜெயின் மெட்ரிக் பள்ளிகயிலும் வைக்கப்பட்டுள்ளன
அனைத்து ஓட்டு பெட்டிகளும் வைக்கப்பட்டதும் வாக்கு எண்ணிக்கை மையம் கதவுகளை பூட்டி தேர்தல் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், "கடலுார் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணும் பணியில் 6,500 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். மொத்தம் 1,959 மேஜைகள் போடப்படும். ஒரு அறையில் ஓட்டுச்சீட்டுகளை நிறம் வாரியாக பிரித்து கட்டப்படும். பின்னர் ஒரு அறையில் எண்ணப்படும். சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் பதவிக்கு கூடுதல் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இதுதவிர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இருந்தபடியே அதிகாரிகள் சுழற்சி முறையில் கண்காணிப்பார்கள். நுண்பிரிவு அலுவலர்களும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
எந்த மேஜையில் எந்த வார்டுக்கு வாக்குகள் எண்ணப்படுகிறது என்பது அறிவித்தவுடன் அதற்கான வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள்.தேர்வு முடிவுகள் சுற்று வாரியாக உடனுக்குடன் அறிவிக்கப்படும்" என்றார்.