ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், அசோகபுரம்,ஈரோடு காந்திஜி சாலையில் தலைமை தபால் நிலையம் எதிரில் வாரந்தோறும் திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய அளவில் இந்த ஜவுளி சந்தை மிகவும் புகழ் பெற்றதாகும். இச்சந்தையில் விலை மலிவாக கிடைக்கும் என்பதால் அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் மொத்தமாக பெற்றுச் செல்கின்றனர்.இதனால் சந்தையில் எப்போதும் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். அதுவும் விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல் பண்டிகையை ஒட்டி வியாபாரம் மேலும் சூடு பிடிக்கும்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வார ஜவுளி சந்தை கூடியது. கடந்த சில நாட்களாக தீபாவளி பண்டிகையொட்டி வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் நேற்று இரவு கூடிய சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா ஆந்திரா வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், பொதுமக்களும் வாரச் சந்தைக்கு திரண்டு வந்து விதவிதமான ஜவுளி ரகங்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர். இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் விதவிதமான புதிய ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக காட்டன் ஐட்டங்கள் அதிக அளவில் வந்திருப்பதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரவில் தொடங்கிய வாரச் சந்தை வியாபாரம் அதிகாலை வரை விறுவிறுப்பாக நடந்தது.
இதனால் ஜவுளி சந்தை நடந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இனி வரக்கூடிய நாட்களிலும் கூட்டம் அதிகரித்து வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.