'நிவர்' புயல் எதிரொலியாக, நாகை நகராட்சிப் பணிகளில், காலை முதல் கவனம் செலுத்திய எம்.எல்.ஏ மு.தமிமுன் அன்சாரி, மாலையில் திட்டச்சேரி பேருராட்சி மற்றும் திருமருகல் ஒன்றியத்தில், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
மேலும், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். பிறகு, திருமருகலில் யூனியன் சேர்மன் ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆயத்தப் பணிகள் குறித்து விவாதித்தார். பிறகு, ஏனங்குடி, புத்தகரம், கேதாரிமங்கலம், சீயாத்தமங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பொது மக்களைச் சந்தித்து, விழிப்புணர்வாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போதே, அக்கிராம வி.ஏ.ஓ.க்களை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு, ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டார். பழங்குடி, புறாக்கிராமம், வாழ்மங்கலம், கொந்தை, கட்டுமாவடி பகுதிகளில் பணிகள் குறித்தும் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினார். கிராமங்கள் தோறும் குடிநீர் வினியோகத்திற்கு, ஜெனரேட்டர் ஏற்பாடுகளின் அவசியம் குறித்துப் பேசினார்.
அதேபோல், மரம் வெட்டும் மெஷின்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். பாதிக்கப்படும் மக்கள், தங்கிட பள்ளிக் கூடங்களின் தயார் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்பு, மழை நீரை உடனுக்குடன் அகற்றும் ஏற்பாடுகள் குறித்தும் பேசினார்.