சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்பொழுது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவுக்கு சொந்தமான காரின் முன் பக்கத்தில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. அவரை பின்தொடர்ந்து அமமுகவை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆகியோர் காரில் சென்றனர். மருத்துவமனையிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளார்.
சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ''அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்ததுவத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. 2017 ஆம் ஆண்டிலேயே சசிகலா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆட்சி நடக்கிறது. எனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் படங்களை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை'' என்றார்.
இந்நிலையில் ''அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாதான். அதனால்தான் அதிமுக கொடிகள் காரில் பொருத்தப்பட்டது. சசிகலா காரில் அதிமுக கொடியை பொருத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுகவை மீட்டெடுக்க அமமுக தொடங்கப்பட்டது.'' என டி.டி.வி.தினகரன் விளக்கமளித்துள்ளார்.