சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மாற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ 25 ஆயிரத்தை இந்த கல்லூரியிலும் வழங்க வலியுறுத்தி பணியைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதன் கிழமையன்று 7- ஆம் நாள் போராட்டத்தில் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் உயர் மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் 140 பேர் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டக்களத்தில் இணைந்து போராடினார்கள். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமேஷ், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பயிற்சி மருத்துவர்கள் எங்கள் கோரிக்கையை என்றைக்கு நிறைவேற்றித் தருகிறீர்கள் என்று அதனை எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் என்றார்கள். அவர்கள் எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கவில்லை வாய்மொழியாகத்தான் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்தநிலையில் வரும் சனிக்கிழமை சுகாதாரத்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோருடன் பயிற்சி மருத்துவர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த சென்னையில் கூட்ட ஏற்பாடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோரிக்கை நிறைவேறும் வரை பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.