நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. அதனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் குறிப்பிட்ட சில கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்தனர். அந்த வகையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.