தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4 ஆவது ஆண்டில் இன்று (07.05.2024) அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வணக்கம். மக்களின் நம்பிக்கையையும், நல் ஆதரவையும் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றேன். 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள் மே 7. இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்ன என்று தினம் தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட, பயன் அடைந்த மக்கள் சொல்வதுதான் உண்மையான பாராட்டு. 3 ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் கூட்டணி மற்றும் தோழமை கட்சிகள் திமுக அரசு நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தன்னுடைய வாழ்த்துச் செய்தியை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. பல்வேறு செயல் திட்டங்களால் திமுக அரசு தனது சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்து 74,757 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் மூன்று ஆண்டுகளாக படைத்து வரும் சாதனைகள் தமிழ்நாட்டு மக்களால் பாராட்டப்படுகின்றன. முதல்வரின் திட்டங்களை அறிந்து வியந்து மற்ற மாநிலங்களும் அதை செயல்படுத்திட ஆர்வம் காட்டி வருகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.